Latestமலேசியா

நாளை தொடங்கும் தேசிய அறிவியல் விழா போட்டியில் 350 மாணவர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர், செப் -26,

இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான அறிவியல் விழா நாளை செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் கோலாலம்பூர் இம்பி மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்வாண்டு 396 பள்ளிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கெடுத்து அவற்றில் வெற்றியடைந்த 70 பள்ளிகளைச் சார்ந்த 350 மாணவர்கள் தத்தம் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவிலான அறிவியல் விழாவில் களம் காண உள்ளனர். தேசிய நிலையில், நடுவர் குழுவால் வழங்கப்பட்ட 10 தலைப்புகளிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, அறிவியல் செயற்பாங்கு திறன்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர். அதோடு, மாணவர்களின் அறிவியல் ஆற்றலைப் பரிசோதிக்கும் வண்ணம், அவர்களுக்கான நேரடி கைமுறை தேர்வும் அங்கு நடத்தப்படும் என அஸ்துதியின் தலைவர் முனைவர் யூனோஸ் யாசின் குறிப்பிட்டார்.

முதல்நாள் 27 செப்டம்பர், மதிப்பீடு நிறைவடையும் வேளையில், மறுநாள் 28 செப்டம்பர், இம்மாணவர்கள் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வர உள்ளனர். இரண்டாம் நாள் விழா பொதுக் கண்காட்சியாக நடைபெறவுள்ளதால், சுற்றுவட்டாரப் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகத் தலைவர்கள் என அனைவரும் இவ்விழாவில் கலந்து, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆற்றலை நேரடியாகக் கண்டு களிக்கும்படி அறிவியல் விழா இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா வெற்றியாளர்கள் மொத்தம் நான்கு பிரிவுகளில் அறிவிக்கப்படுவார்கள். 10, 9, 8, 7ஆம் நிலையில் வெற்றியடைந்த பள்ளிகளுக்கு வெண்கல விருதும் தலா 700 ரிங்கிட் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 6, 5 4ஆம் நிலை வெற்றியாளர்களுக்கு வெள்ளி விருதும் தலா 1000 ரிங்கிட் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 3 மற்றும் 2ஆம் நிலை வெற்றியாளர்கள் தங்க விருதைப் பெறுவதோடு தலா
1500 ரிங்கிட் ரொக்கப் பரிசையும் வெல்வார்கள். முதல் நிலை வெற்றியாளர் பிளாட்டினம் விருதை வெல்வதோடு 2,500 ரிங்கிட் ரொக்கப் பரிசையும் தட்டிச் செல்வார்கள்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!