
கோலாலாம்பூர், மார்ச்-2-மலேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென, ம.இ.காவின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரக் குழு வலியுறுத்தியுள்ளது.
எந்த அடிப்படையில் மக்கள்தொகை கணக்கிடப்படுகிறது என்பது குறித்து விளக்க வேண்டியது தேசியப் பதிவிலாகாவின் கடமையென, அக்குழுவின் தலைவர் Dr மங்கலேஸ்வரன் அண்ணாமலை கூறினார்.
கோலாலாம்பூரில் அக்குழு நடத்திய கருத்தரங்கிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாடாளாவிய நிலைலிருந்து ஏராளமானோர் பங்குகொண்ட அக்கருத்தரங்களில் இந்த மக்கள்தொகை வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இரண்டாவதாக பொதுச் சேவைத் துறையில் வெறும் 3.7 விழுக்காடாக மட்டுமே உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை 8 விழுக்காடாக உயர்த்துவதாகும்.
அடுத்து, மித்ரா… இது இந்தியர்களை சமூகப் – பொருளாதார ரீதியாக உருமாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டதாகும்; ஆனால் நடப்பதோ வேறு என மங்கலேஸ்வரன் குறிப்பிட்டார்.
Red tape எனப்படும் நிர்வாகக் கெடுபிடிகளும் அதிகமாக இருப்பதாகக் கூறிய அவர், மித்ராவின் கீழ் ஓர் அறக்கட்டளை அமைக்கவும் பரிந்துரைப்பதாக சொன்னார்.
இறுதியாக, அரசாங்கம் மீண்டும் பொருள் மற்றும் சேவை வரியான GST-கே திரும்ப வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா தொடக்கி வைத்த இக்கருத்தரங்களில், ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



