
கோலாலம்பூர், ஜூன் 23 – தற்போது 3.72 விழுக்காடாக இருக்கும் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்வி திட்டத்திற்கான இடங்களை இவ்வாண்டு முதல் ஆறு விழுக்காடாக அதிகரிக்கும்படி செனட்டர் டத்தோ சி.சிவராஜ் கேட்டுக் கொண்டார். மெட்ரிகுலேசன் திட்டத்தில் பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90 விழுக்காடு இடங்களும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்பப்படும் என்ற அரசாங்கத்தின் முடிவு குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பூமிபுத்ரா அல்லாதாருக்கான 10 விழுக்காடு இடங்களில் சீன மாணவர்களுக்கு 5.43 விழுக்காடு இடங்களும் இந்திய மாணவர்களுக்கு 3 விழுக்காடு இடங்களும் மறறவர்களுக்கு 0.85 இடங்களும் ஒதுக்கப்படும் என் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் சிவராஜ் சந்திரன் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை மெட்ரிகுலேசன் திட்டத்தில் மொத்தம் 30,000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியர்களுக்கு சராசரி 1,136 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.