புது டெல்லி, டிசம்பர்-27 – இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பொருளாதார மேதையுமான Dr மன்மோகன் சிங் 92 வயதில் காலமானார்.
வயது மூப்பால் ஏப்ரலில் அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தவருக்கு, நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக புது டெல்லி ஏய்ம்ஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 9.51 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.
2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த போது வெளிநாட்டவர் என்ற சர்ச்சை எழுந்ததால் சோனியா காந்தி பிரதமர் பதவியை நிராகரித்து, தனக்கு பதிலாக மன்மோகன் சிங்கின் பெயரை முன்மொழிந்தார்.
இதையடுத்து இந்தியாவின் முதல் சீக்கிய மற்றும் சிறுபான்மையின பிரதமராக மன்மோகன் பதவியேற்றார்.
சோனியாவே ‘நிழல்’ பிரதமர் என்றும் இவர் வெறும் ‘பொம்மை’ பிரதமர் என்றும் விமர்சிக்கப்பட்டாலும், தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தது சாதனை தான்.
பிரதமராக இருந்ததை விட 1991-1996 வரையில் நிதியமைச்சராக இருந்த போது, இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்டதற்காக மன்மோகன் அதிகம் நினைவுக் கூறப்படுகிறார்.
அக்காலக்கட்டத்தில் இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து சீர்படுத்தியதே, பின்னாளில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கின் பெயர் பரிசீலிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமென்றும் கூறப்படுகிறது.
அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.