
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-7, நாட்டிலுள்ள இந்திய முஸ்லீம்கள் தங்களை பூமிபுத்ராக்களாக பதிவதில் பிரச்னையை எதிர்நோக்குவதாக எழுந்துள்ள புகார்களை கவனிக்குமாறு, உள்துறை அமைச்சை பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அச்சமூகத்தில் அது ஒரு நீண்ட கால விரக்தியாக இருந்து வருவதை தாம் அறிவதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அதனை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது என, ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற பினாங்கு முஸ்லீம் லீக்கின் 70-ம் நிறைவாண்டு விருந்தில் பங்கேற்று பேசிய போது பிரதமர் சொன்னார்.
என்றாலும், பூமிபுத்ரா அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்பவே பரிசீலிக்கப்படும் என பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அன்வார் கூறினார்.
பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறுவது அண்மையக் காலமாகத்தான் சிக்கலாக உள்ளது; முன்பெல்லாம் அதில் பெரிய பிரச்னைகள் இருந்ததில்லை என பினாங்கு முஸ்லீம் லீக் தலைவரும் மலேசிய முஸ்லீம் லீக்கின் தலைவருமான நஜ்முதின் காதிர் (Najmudeen Kader) முன்னதாகக் கூறியிருந்தார்.
மலாய் கலாச்சாரத்தோடு கலந்து விட்டதால், இந்திய முஸ்லீம்கள் இயல்பாகவே பூமிபுத்ரா அந்தஸ்துக்குத் தகுதியாவதாக நஜ்முதின் சொன்னார்.
பூமிபுத்ரா அந்தஸ்து இல்லாததால், வீடு வாங்குதல், தொழில் வாய்ப்புகள், பல்கலைக்கழக நுழைவுப் போன்றவற்றில் இந்திய முஸ்லீம் சமுகம் பிரச்னையை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது 1.1 மில்லியன் இந்திய முஸ்லீம்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.