
கோலாலாம்பூர், நவம்பர்-26 – நாட்டில் அண்மைய காலமாக நிகழ்ந்து வரும் பல்வேறும் சம்பவங்கள் தொடர்பில் போலீஸ் எடுத்துள்ள, எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இந்திரா காந்தியிடமிருந்து மகளை கடத்திச் சென்ற முன்னாள் கணவர் ஆண்டுக் கணக்காகியும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலிருப்பது, பொது மக்களும் தனிநபர்களும் திடீர் திடீரென காணாமல் போவது, ஆங்காங்கே சண்டை மற்றும் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது போன்றவற்றை ராயர் சுட்டிக் காட்டினார்.
தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மிரட்டல் விடுக்கப்படுவது, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன,
தமக்குக் கூட அண்மையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ராயர், இதுபோன்ற சம்பவங்கள் விரைந்து தீர்வுக் காணப்படுவது அவசியம் என வலியுறுத்தினார்.
2026 பட்ஜெட்டில் போலீஸ் துறையின் கொள்கை மற்றும் செயல்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 660 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், அதற்கேற்ப இது போன்ற பிரச்னைகளும் ஆக்கரமாக தீர்க்கப்படுவது முக்கியம் என்றார்.
தம்முடைய நோக்கம் போலீஸார் எதுவுமே செய்யவில்லை என பழிபோடுவது அல்ல என தெளிவுப்படுத்திய ராயர், மலேசியப் போலீஸாரின் திறமை அனைவரும் மெச்சக் கூடிய வகையில் உள்ளது – அதனைக் கட்டிக் காக்க வேண்டுமென்பதற்காகத் தான் இவ்விவகாரத்தை எழுப்புவதாக சொன்னார்.
தாம் குறிப்பிட்ட சம்பவங்களுக்கு உரியத் தீர்வில்லாமல் போனால், வெளியிலிருந்து போலீஸார் மீது குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும்; இதனை நாம் அனுமதிக்கக் கூடாது; போலீஸைத் தற்காக்க வேண்டுமென்றார் அவர்.



