
ஜாவா, ஆகஸ்ட்-15- இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தில், 360 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மைய சமையலறையில் சமைக்கப்பட்ட அவ்வுணவுகள், சுற்று வட்டார பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து அந்த கேட்டரிங் நிறுவனத்தின் உணவு கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக் கட்டணங்களை அரசாங்கமே ஏற்குமென அறிவித்தனர்.
இந்த இலவச உணவுத் திட்டம் அதிபர் பிராபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) ஆட்சியில் கடந்த ஜனவரியில் அறிமுகம் கண்டதிலிருந்து, மிகப் பெரிய நச்சுணவுப் பாதிப்புச் சம்பவமாக இது அமைந்துள்ளது.
இதற்கு முன் இத்திட்டத்தில் பல்வேறு மாகாணங்களில் 1,000 பேர் வரை நச்சுணவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச மதிய உணவுத் திட்டம் தற்போது 15 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை உட்படுத்தியுள்ளது.
ஆண்டிறுதிக்குள் 83 மில்லியன் பேரை அது சென்றடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.