
ஜகார்த்தா, செப்டம்பர்-4 – இந்தோனேசியாவில் சாலை ஆர்ப்பாட்டங்களின் போது e-hailing ஓட்டுநர் Affan Kurniawan போலீஸ் வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டு போலீஸ் படையான Polri-யின் மத்திய நன்னடத்தை மற்றும் நெறிமுறை விசாரணைக் குழு, நேற்று தனது விசாரணையின் இறுதியில் அந்த அதிரடி முடிவை அறிவித்தது.
தீர்ப்பைக் கேட்டு கண்கலங்கிய Cosmas Kaju Gae எனும் அப்போலீஸ்காரர், கடவுள் சாட்சியாக யாரையும் காயப்படுத்தும் அல்லது கொல்லும் நோக்கம் தமக்குக் கிடையாது; நடந்தது ஒரு விபத்து என தெரிவித்தார்.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடந்த சம்பவத்தில் Cosmas பயணித்த போலீஸ் வாகனம் மோதி Kurniawan உயிரிழந்தார்; அப்போது Cosmas முன்பக்க பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார்.
காரை ஓட்டியவரோ இன்னொரு போலீஸ்காரர்; அச்சம்பவம் ‘கடுமையான மோதல்’ என வகைப்படுத்தப்பப்பட்டு இந்த இருவருமே குற்றம் சாட்டப்பட்டனர்; இந்நிலையில் ஓட்டுநர் மீதான விசாரணை இன்று தொடங்குகிறது.
பின்னால் அமர்ந்திருந்த 5 போலீஸ்காரர்கள் ‘மிதமான மோதலுக்கான’ விசாரணையை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.
பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை, வாழ்க்கைச் செலவின உயர்வு போன்ற நெருக்கடிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினார்களின் வீட்டு அலவன்ஸ் தொகை அண்மையில் மலேசிய ரிங்கிட்டுக்கு 13,000 உயர்த்தப்பட்டது.
இது ஜகார்த்தா மக்களின் குறைந்தபட்ச சம்பளத்தை விட 10 மடங்கும், புறநகர் பகுதி வாழ் மக்களின் சம்பளத்தை விட 20 மடங்கும் அதிகமாகும்.
இதனால் கொதித்துப் போய் மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கிய போதே, அந்த e-hailing ஓட்டுநர் பலியானார்.
இதனால் இந்தோனேசியா முழுவதும் கலவரம் வெடித்து குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.