
கோலாலம்பூர், மார்ச்-6-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின், கட்சியில் மீண்டும் சேர்வதற்கான கடிதத்தை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
3 முறை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியக் குற்றச்சாட்டில் 2023-ஆம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் சேரலாம் என, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி நேற்று முறையாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, கைரி இந்த கருத்தை தெரிவித்தார்.
Keluar Sekejap போட்காஸில் பேசிய அவர், “நான் இப்போதே அந்தக் கடிதத்தை எழுதுகிறேன்” என நகைச்சுவையாக கூறினார்.
இது கட்சியில் மீண்டும் சேர்வதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பக் கடிதத்தை குறிப்பதாகும்.
இதற்கு முன்பு, கைரியிடமிருந்து இதுவரை எந்த முறையீட்டு கடிதமும் பெறப்படவில்லை என சாஹிட் கூறியிருந்தார்.
ஐனவரியில் அம்னோ நிகழ்ச்சிகளில் கைரியின் பங்கேற்பும், கட்சி உறுப்பினர்களிடையே அவருக்கான ஆதரவும் அதிகரித்து வருவதால், அவர் மீண்டும் அம்னோவில் அவர் மீண்டும் சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
என்றாலும், இப்போதுள்ள முக்கியமான கேள்வி… கைரி உண்மையிலேயே அக்கடிதத்தை அனுப்புவாரா என்பதே….
தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு உருப்படியான காரணம் வழங்கப்படவில்லை என அவர் இதுநாள் வரை கூறி வருவதே அதற்குக் காரணமாகும்…



