
கோலாலம்பூர், மார்ச் 27 -சீனாவின் Shenzhen னுக்கு புறப்பட்ட விமானம் நள்ளிரவுக்கு பிறகு அந்த விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதால் அது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தில் அவசரமாக தரையிறங்கியதாக சிலங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கூறியிருந்ததை ஏர் ஆசியா இன்று மறுத்தது. விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றின் குழாய் சேதமடைந்ததால் வெப்பக் காற்று வெளியேறியதால் பழுதுபார்ப்பதற்காக விமானம் பழுதுபார்க்கும் மையத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது என்று ஏர் ஆசியா தெரிவித்துள்ளது. விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடிக்கவில்லை என்பதை ஏர் ஆசியா உறுதிப்படுத்தியதோடு அந்த விமானம் மீண்டும் திங்கக்கிழமை சேவைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.
விமானக் குழுவினர் விரைவாகச் செயல்பட்டு பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியதாக ஏர் ஆசியாவின் துணை தலைமை செயல் அதிகாரி Chester Voo வை மோற்கோள் காட்டி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. எங்கள் விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் பொருத்தமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதை தொடர்ந்து எந்தவொரு சம்பவமும் இன்றி அந்த விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியதாக அவர் கூறினார். அனைத்து 171 பயணிகளும் பாதுகாப்பாக இறங்கி, மற்றொரு விமானத்தில் அதிகாலை மணி 3.46க்கு புறப்பட்டு, காலை மணி 7.51க்கு சீனாவின் ஷென்செனின் Bao’an அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதையும் ஏர் ஆசியா உறுதிப்படுத்தியது. முன்னதாக, ஏர் ஆசியாவின் AK128 விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் வலது இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக KLIA2 இல் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக FMT செய்தி வெளியிட்டிருந்தது. இதனிடையே அவசர தரையிறக்கம் குறித்து வழக்கமான நடைமுறையின்படி மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரிக்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.