
பத்துமலை, செப்டம்பர்- 24,
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பத்துமலை ஷெங்கா கான்வென்க்ஷன் மண்டபத்தில் (Shenga Covention Hall), ஸ்ரீ வித்யாலயா கல்வி மற்றும் கலை மையத்தின் முதலாம் ஆண்டு விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
கடந்தாண்டு ரவாங் கண்ட்ரி ஹோம்ஸ்-இல் திறக்கப்பட்ட இம்மையம் வெற்றிகரமாக ஓராண்டு பீடு நடை போட்டதைக் கொண்டாடுவதற்கே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவிற்கு Tasly நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ ரவி மற்றும் Nutrilavish-இன் இயக்குனர் டாக்டர் கலை ஆகியோர் நன்கொடை அளித்து பேராதரவு வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்தின் தலைவர் திரு. ஆதிமூலம் மற்றும் தேவர இசைக் கலைமணி பரிமளா தேவி ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
மேடை காண கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது எனும் அடிப்படையில், இந்த வித்யாலயாவில் பயின்று வரும் 5 முதல் 65 வயது வரையிலான மாணவ மணிகள் தேவாரம், மிருதங்க இசை, வயலின், பரதம் மற்றும் யோகா போன்ற கலை படைப்பினை படைத்தனர் என்று வித்யாலயாவின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ வித்யாவதி அருண் குறிப்பிட்டார்.
மாணவர்களிக்கிடையே ஏற்பட்ட பயத்தை களைத்து, நம்மாலும் முடியுமென்ற நம்பிக்கையை வேரூன்ற செய்வதில் ஸ்ரீ வித்யாலயா கல்வி மற்றும் கலை மையத்தின் முதலாம் ஆண்டு விழா முக்கிய தலமாக அமைந்ததென்றால் அது மிகையாகாது.
இவ்வேளையில் தமது மையத்தில் தேவாரம், மிருதங்க இசை, வயலின், பரதம் மற்றும் யோகா போன்ற கலைகளை கற்று தரும் ஆசிரிய பெருந்தகைகளுக்கு தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொண்டார் வித்யாலயாவின் இயக்குனர்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற 70 மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட அதே வேளை இம்மையத்தின் முதுகெலும்பாய் திகழும் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.