
சிரம்பான், ஜூலை ,14 – சிரம்பானில் ForestHeightsசில் கட்டுப்பாட்டை இழந்த லோரி எதிரே வந்த இரண்டு வாகனங்களுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற சம்பவம் தொடர்பான 31 வினாடிகளைக் கொண்ட டேஷ்கேம் மூலம் பதிவான வீடியோ, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின்போது இரண்டு MPV வாகனங்களுக்கு பின்னால் ஓட்டிச் சென்ற ஒரு வாகன ஓட்டியின் டேஷ்கேம் வீடியோ வழியாக இக்கட்சி பதிவானது.
#UpdateInfo என்ற X கணக்கு வெளியிட்டுள்ள வைரலான காட்சிகளில், முழுமையாக சரக்கு ஏற்றிச் சென்ற லோரி கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து சாலையோர விளக்கு கம்பத்தில் மோதியதைக் காணமுடிந்தது.
இரண்டு MPV வாகனங்களும் கடந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, உயரமான அந்த மின் விளக்கு அமைப்பு உடனடியாக நொறுங்கி தரையில் விழுந்ததோடு தீப்பொறிகளும் பறந்தன.
இதுவரை, இந்த வீடியோ 4,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதோடு , நெட்டிசன்கள் இந்த விபத்தை ஓர் அதிசயம் என்றும், அதிரடி திரைப்படத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட காட்சிபோல் இருப்பதாக வருணித்தனர்.