
கோலாலம்பூர், டிசம்பர்-14 – தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சரான இந்த இரண்டே ஆண்டுகளில், டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்தியச் சமூக தொழில்முனைவோருக்காக எண்ணிலடங்கா சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளில் மட்டும் RM471.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அதிலடங்கும்.
அதன் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
இது தவிர, பெண்கள், இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர் ஆகியோருக்கு SPUMI, PENN, BRIEF-i, Vanigham, SOORIAN என தனித்தனியே திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் நிதி, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்க அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த முயற்சிகள் மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப, சமூக முன்னேற்றத்தையும் வாழ்வாதார மேம்பாட்டையும் உறுதிச் செய்துள்ளன.
மலேசிய இந்திய வணிகர் சங்கம் உள்ளிட்ட தலைவர்கள், “இது உண்மையான மாற்றம்” என ரமணனின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து பேசிய துணையமைச்சர், வலுவான அடித்தளத்தை உருவாக்கி இந்தியச் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே தனது முதன்மைக் குறிக்கோள் என்றார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்த அமைச்சரவை மாற்றத்தின் போது துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்தியச் சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை கவனிக்கும் கூடுதல் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இந்தியச் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு குறிப்பாக தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பணிகளுக்கு பல்வேறு மறுமலர்ச்சித் திட்டங்களை அவர் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.



