
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் போலீஸார் சுட்டுக் கொன்ற 3 ஆடவர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்தனர்.
சம்பவத்தின் போது பதிவுச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ குரல் பதிவு உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களையும் அவர்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
அச்சந்திப்பில் போலீஸிடம் 3 கோரிக்கைகளை வைத்ததாக, அக்குடும்பத்தார் சார்பில் பேசிய அருண் துரைசாமி கூறினார்.
இச்சம்பவம் எந்த சட்ட விதிகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது? விசாரணைக் குழுவில் இருப்பவர்கள் யார் யார் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், சுட்டுக் கொன்ற போலீஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா அல்லது இன்னமும் பணியில் நீடிக்கிறார்களா? என்பதை போலீஸ் விளக்க வேண்டும் என்பதே அம்மூன்று கோரிக்கைகளாகும்.
ஆனால், அவற்றுக்கு உரிய பதில் வரவில்லை என அருண் ஏமாற்றத்துடன் கூறினார்.
எதற்கெடுத்தாலும், விசாரணை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுமென உத்தரவாதம் அளித்தார்களே ஒழிய, கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் வழங்கப்படவில்லை என்றார் அவர்.
சுட்டுக் கொல்லப்பட்டு இன்றோடு 17 நாட்கள் ஆகி விட்டன; இதுவரை விசாரணைகளில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லாமே மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவே தோன்றுவதாக அருண் விரக்தியுடன் கூறினார்.
போலீஸார் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பதா இல்லையா, என்பது முடிவாகும் என்றார் அவர்.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்துமாறு IGP-க்கு உத்தரவிட்டிருந்தார்.



