
தெஹ்ரான், பிப்ரவரி-22-அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் தீவிரமாகி வரும் நிலையில், ஈரானிய உச்சத் தலைவருக்கு எதிராக கடுமையான இராணுவ நடவடிக்கைகள் குறித்து வாஷிங்டன் பரிசீலித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரானிய உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenei மற்றும் அவரது மகன் Mojtaba Khamenei மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து இராணுவ ஆலோசனைகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அனைத்துத் தேர்வுகளும் இன்னும் பரிசீலனையில் உள்ளன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு lobster, steak போன்ற சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக, முக்கிய இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்பு வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க இத்தகைய சிறப்பு உணவுகள் வழங்கப்படுவது வழக்கமாகும்.
அவ்வகையில் இது, எதிர்காலத்தில் பெரிய இராணுவ நடவடிக்கை நடைபெறக்கூடும் என்ற யூகங்களை அதிகரித்துள்ளது.
இந்த ஆகக் கடைசி நிலவரங்கள், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
ஈரானோ, தனது தலைமை மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இப்போது உலக நாடுகள் அமெரிக்காவின் அடுத்த நகர்வை கவனமாக கண்காணித்து வருகின்றன.
இந்த பதற்றம் அமைதியாக முடிவடையுமா, அல்லது பெரும் மோதலுக்கு வழி வகுக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.



