தஞ்சோங் மாலிம், அக்டோபர்-9, நாட்டின் மூத்த அரசியல்வாதியும் தமிழ்ப்பற்றாளருமான தான் ஸ்ரீ க.குமரன், தனது 60 ஆண்டு கால சேமிப்பான ஈராயிரம் தமிழ் நூல்களை இளம் தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், உயர் கல்வி மையங்களுக்கும் கொடுத்து வருகிறார்.
வயது முதுமையால் தம்மால் அவற்றை பயன்படுத்த இயலாத காரணத்தால், மற்றவர் பயன்பெறும் வகையில் அந்த முன்னாள் சுகாதார துணையமைச்சர் அவ்வாறு செய்து வருகிறார்.
தமது பொது வாழ்க்கைக்கும் மேடைப் பேச்சாற்றலுக்கும் பெரிதும் துணைபுரிந்த அந்நூல்களை, வாழும் காலத்திலேயே மற்றவர் பயன்பெற கொடுத்து விடுவதே நல்லதென, 88 வயது தான் ஸ்ரீ குமரன் கூறினார்.
முதல் கட்டமாக பேராக், தஞ்சோங் மாலிம் UPSI பல்கலைக்கழகத்திற்கு 500 புத்தகங்களையும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைக்கு 150 நூல்களையும் அவர் அன்பளிப்பாகக் கொடுத்து ஊக்குவித்தார்.
உப்சி பல்கலைக்கழகத்தில் தான் ஸ்ரீ குமரன் ஒப்படைத்த நூல்களை அதன் கலைப் புலத் தலைவர் பேராசிரியர் Dr மஸ்துரா முஹமட் பெற்றுக்கொண்டார்.
தான் ஸ்ரீ குமரனை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற நல்லுள்ளங்களும் உயர் கல்விக் கூட மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவிட வேண்டுமென Dr மஸ்துரா கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், நூல்களை அன்பளிப்புச் செய்திருப்பதன் மூலம், உப்சி பல்கலைக்கழகத்தில் முறையான தமிழ் நூலகம் இல்லையென்ற குறையை தான் ஸ்ரீ குமரன் போக்கியிருப்பதாக, உப்சி இந்தியப் பகுதி பொறுப்பாளர் இளங்குமரன் சிவானந்தன் கூறினார்.
காலத்தை வென்ற அந்நூல்கள் அடுத்தத் தலைமுறைக்கும் போய் சேரும் என்றார் அவர்.
இந்நிலையில் மற்றொரு பல்கலைக்கழகம் தம்மிடம் 500 புத்தகங்களைக் கேட்டிருப்பதாக, ஆத்மார்த்த மனதிருப்தியுடன் கூறினார் தான் ஸ்ரீ குமரன்.