உத்திரப்பிரதேசம், செப்டம்பர் 17 – கணவன் தினமும் குளிக்காததால் ஏற்பட்ட கடும் அதிருப்தியில் திருமணமான 40வது நாளில் விவாகரத்து கேட்டு போலிஸ் நிலையம் வந்துள்ளார் பெண் ஒருவர்.
உத்தரப்பிரதேச மாநிலமான ஆக்ராவில், கணவரை தினமும் குளித்து சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை ஏற்க மறுப்பதாக அப்பெண் மன வேதனையுடன்
கூறியுள்ளார்.
மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிக்கும் பழக்கமுடைய அந்த கணவர் திருமணமான 40 நாட்களில் வெறும் 6 முறைதான் குளித்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டால் போதும், தூய்மையடைந்து விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார், அந்த ஆடவர்.
இதனிடையே காவல்துறையினருடன் கலந்துரையாடிய பிறகு, இறுதியில் கணவர் தன்னுடைய உடல் சுத்தத்தைப் பேணிக்காத்து வாழ முயல்வதாக அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார்.
எனினும், இதற்கு உடன்படாத அந்த பெண் இனிமேலும் வாழ முடியாது என விடாப்பிடியாய் கூறிவிட்டாராம்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணவன் – மனைவியை குடும்ப நல ஆலோசனை மையத்தில் ஒரு வாரம் கவுன்சிலிங் பெற போலீசார் அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.