
கோலாலம்பூர், மே 5- காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டங்களைத் தணிப்பதில் மலேசியா தனது பங்கை வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடமிருந்து (Shehbaz Sharif) தொலைபேசி அழைப்பு வந்தபோது, இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். அதே நேரத்தில் காஷ்மீர் பதற்றத்தைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை, ஷெஹ்பாஸின் அதிகாரப்பூர்வ மலேசிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, அன்வார், வன்முறையையைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, காஷ்மீர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தன் முழு ஆதரவையும் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவின் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான நல்லுறவுகள், காக்கப்படவேண்டிய சொத்துக்கள் என்றும் கூறினார். இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் பாராட்டு தெரிவித்தோடு தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விரைவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக சரியான நேரத்தில், மலேசியா, பாகிஸ்தான் தலைவரை அமைதியான சூழ்நிலையில் வரவேற்கும் என்றார்.