Latestஇந்தியா

18 ஆண்டுகளாக ஏமன் ஆடவரின் தலையில் சிக்கியிருந்த தோட்டா; அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இந்திய மருத்துவர்கள் சாதனை

பெங்களூரு, டிசம்பர் 13 – மருத்துவ அறிவியலின் மேலும் ஒரு மைல்கல்லாக, 29 வயது ஏமன் நாட்டு ஆடவர் ஒருவரின் தலையில், ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளாக சிக்கி இருந்த துப்பாக்கித் தோட்டாவை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர், இந்தியா, பெங்களூரு மருத்துவர்கள்.

அந்த ஆடவருக்கு பத்து வயது இருக்கும் போது, ஏமனில் இரு கும்பல்களுக்கு இடையில் மூண்ட சண்டையின் போது, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

அதனால், 3 செண்டிமீட்டர் தோட்டா ஒன்று அவரது இடது காது வழியாக தலையினுள் புகுந்து, எலும்பில் பொதிந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டனர். எனினும், அவரது தலையில் பொதிந்திருந்த தோட்டா அகற்றப்படவில்லை.

அதனால், கடந்த பல ஆண்டுகளாக காது கேளாமை, தலைவலி, காதுகளில் இருந்து சீல் வடிவது போன்ற உபாதைகளை அவர் அனுபவிக்க நேர்ந்தது.

கடந்த வாரம் பெங்களூருவிலுள்ள, ஆஸ்டர் (Aster) மருத்துவமனை மருத்துவர்கள், அந்த தோட்டாவை அகற்றும் சவால் மிகுந்த அறுவை சிகிச்சையில் இறங்கினர்.

எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தலையில் தோட்டாவை துல்லியமாக கண்டறிந்து, அதனை சுற்றியுள்ள திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் வெற்றிக் கண்டனர்.

அந்த அறுவை சிகிச்சையால், பல ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வந்த அந்த ஏமன் ஆடவர், தற்போது செவித்திறனை ஓரளவு மீண்டும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!