
கோலாலம்பூர், ஏப் 2 – பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களை த்ரெட்ஸ் (Threads) இணையத் தளத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC) விசாரித்து வருகிறது.
விசாரணைக்கு உதவுவதற்காக மூவர் வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் அனைவரும் பரப்பிய உள்ளடக்கம் தவறானது மற்றும் தவறாக வழிநடத்துவதுடன், பயனர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டதாக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.
1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
இப்பிரிவில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்த சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை MCMC கடுமையாக கருதுவதோடு சட்டத்தை மீறும் எந்தவொரு தனிநபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அதோடு சமூக ஊடகத் தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறும், சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு MCMC நினைவூட்டியுள்ளது.



