
வாஷிங்டன், மே-21 – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு இப்போது தான் புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன் அவருக்கு அந்நோய் இருந்ததில்லை என, பைடன் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புற்றுநோய் கண்டறியப்பட்ட தகவல் வெளியான நேரம் குறித்து, நடப்பு அதிபர் டோனல்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியதை அடுத்து பைடன் தரப்பில் இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“பைடனின் புற்றுநோய் தீவிர நிலையிலிருப்பதாகக் கூறப்படுகிறது; இந்நிலையை எட்ட நீண்ட காலம் பிடித்திருக்க வேண்டும்; அப்படியானால் அவர் பதவிலியிருந்த போது இவ்விஷயம் பொது மக்களுக்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டதா?” என டிரம்ப் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்படி மறைக்கப்பட்டிருந்தால் அதுவொரு கடுமையான விவகாரம் என டரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் அனைவரின் சந்தேகங்களையும் முற்றாக மறுத்த பைடன் அலுவலகம், புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிதலுக்கான அவரின் கடைசி பரிசோதனை 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக் காட்டியது.
அப்போது அவருக்கு அந்நோய் கண்டிருக்கவில்லை.
கடந்த வாரம் தான் சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள் தென்பட்டு அவர் மருத்துவரை நாடினார்.
பரிசோதனைகளின் முடிவுகள் இவ்வாரம் வெளியாகி, புற்றுநோய் இருப்பது முதன் முறையாக உறுதிச் செய்யப்பட்டது.
அதையும் அறிவித்து விட்டோம்; மூடி மறைக்க ஒன்றுமில்லை என அவ்வறிக்கை மேலும் கூறியது