
கோலாலம்பூர், ஏப்ரல்-28-நாட்டில் இதரச் சமூகங்கள் இன ஒற்றுமையுடன் முன்னேறி வரும் வேளையில், இந்தியச் சமூகம் மட்டும் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டு சிதறிக் கிடப்பது வருத்தமளிப்பதாக, பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கவலைத் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது நீண்ட கால அடிப்படையில் சமூகத்திற்குப் பெரும் தீமையை விளைவிக்கும் என அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, எதிர்க்கட்சித் தரப்பில் இந்தியர்களின் குரலை ஒலிக்கச் செய்ய ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதி கூட இல்லாத நிலை, மக்களின் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இப்போதையப் புறக்கணிப்பு எதிர்காலத்தின் பெருங்கவலையாக மாறிவிடும் என்பதால், இந்தியச் சமூகம் பிளவுகளைத் தாண்டி ஒருமித்த சக்தியாக விழித்தெழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில் ஒற்றுமையே நம் சமூகத்தின் பாதுகாப்பு என, பெர்சாத்துவில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் தலைவருமான சஞ்சீவன் வலியுறுத்தியுள்ளார்.



