பெய்ரூட், அக்டோபர்-2, இஸ்ரேல்-லெபனான் போர் மோசமடைவதால், லெபனானிலிருக்கும் எஞ்சிய 15 மலேசியர்களும் 3 வெளிநாட்டு மனைவியரும் தாயகம் கொண்டு வரப்படவுள்ளனர்.
அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியது.
பாதுகாப்புக் கருதி ஏற்கனவே 9 மலேசியர்கள் அந்த மேற்காசிய நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வேளையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருமென விஸ்மா புத்ரா தெரிவித்தது.
லெபனானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவதால், அங்குள்ள மலேசியர்கள் தாயகம் திரும்ப தயாராக வேண்டுமென்றும், இங்கிருந்து யாரும் புதிதாக அந்நாட்டுக்குச் செல்ல வேண்டாமென்றும் கடந்த வாரம் தான் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியிருந்தது.
லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்களையும் மலேசியா இந்நேரத்தில் கண்டித்துள்ளது.
திங்கட்கிழமை பெய்ரூட்டில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அங்குள்ள 3 மாவட்டங்களில் உள்ள மக்களையும் வெளியேற இஸ்ரேலியப் படைகள் முன்னதாக உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.