
பத்து பஹாட், அக்டோபர்-29,
ஜோகூர், பத்து பஹாட்டில் வீட்டில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த 6 வயது சிறுவனின் பெற்றோரை, விசாரணைகளுக்கு உதவுவதற்காக, போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
41 வயதுடைய அத்தம்பதி நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வாக்குமுலம் அளிக்க வந்தபோது கைதாகினர்.
உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ காயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் குழந்தையை சித்ரவதை செய்தல், அலட்சியப்படுத்துதல், கைவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 2001 சிறார் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கூடுதலாக, ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
இவ்வேளையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் சீரான நிலையில் இருப்பதாகவும், ஆனால் மேல் சிகிச்சைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணிக்கு தூங்கி எழுந்தபோது தனது மகன் கழுத்தில் அறுப்பட்டு இரத்தக் காயங்களுடன் இருந்தது கண்டு தாய் அதிர்ந்துபோனார்.
பின்னர் அது குறித்து அவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.



