
கம்பார், மார்ச்-10-பேராக், கம்பாரில் 58 வயது ஆடவர் தனது மகனையும் சகோதரியையும் கத்தியால் குத்தியதாகக் கூறி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சனிக்கிழமை மாலை தாமான் பண்டார் பாரு கம்பாரில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்தது.
சந்தேக நபர் தனது 22 வயது மகனையும் 56 வயது சகோதரியையும் தாக்கியுள்ளார்.
அதில் கழுத்து, முதுகுப் பகுதிகளில் கடுமையாக காயமடைந்த இருவரும் உடனடியாக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சந்தேக நபருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் மாயத் தோற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தவிர, அவர் ஏற்கனவே மனநல சிகிச்சை பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேல் மதிப்பீட்டுக்காக உலு கிந்தா மனநல மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார்.



