சென்னை, டிசம்பர்-1,தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று மற்றும் கனமழையைக் கொண்டு வந்த ஃபெஞ்சல் புயல், நேற்று நள்ளிரவுக் கரையைக் கடந்தது.
இதையடுத்து தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புயல், கர்நாடகா, கேரளா வழியாக அரபுக் கடலுக்குச் செல்வதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.
புயல் கரையைக் கடந்ததும் சென்னையில் மழை நின்றது; ஆனால் பலத்தத் காற்று வீசத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
இதுவரை பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்துள்ளது.
இதனால் அங்கு வானிலை நிலவரத்தைப் பொருத்து இன்று படிப்படியாக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழை பாதிப்புக் காரணமாக, முன்னதாக சென்னை விமான நிலையம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணி வரை (மலேசிய நேரம் காலை 6.30) மூடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் புயல் எச்சரிக்கையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால், சனிக்கிழமை பிற்பகலில் சென்னை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
என்றாலும், மெரினா கடற்கரையில் எச்சரிக்கையையும் மீறி சில பொது மக்கள் கூடியிருந்தனர்.
அங்கு பலத்த காற்று வீசியதோடு, கடற்கரையும் கடல் போல் காட்சியளித்த வீடியோக்கள் வைரலாகின.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்திலிருந்து தப்பிக்க பல மாவட்டங்களில் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.