
இஸ்லாமாபாத், மார்ச்-2 – பாகிஸ்தானில் ‘பணக்கார’ மற்றும் ‘நன்மதிப்புப்’ பெற்ற குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கு, புகுந்த வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வைரலாகியுள்ளது.
MBBS மருத்துவரான அப்பெண், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டு பல்வேறு கனவுகளுடன் கணவன் வீடு சென்றார்.
அங்கும் அவரை சந்தோஷமாகவே பார்த்துக் கொண்டார்கள்; நீச்சல் குளம், ஆடம்பரக் கார்கள், உடற்பயிற்சி மையம் என எல்லா வசதிகளும் அந்த மாளிகை வீட்டில் இருந்துள்ளன.
இந்நிலையில் நான்கைந்து மாதங்கள் போன பிறகு அப்பெண்ணுக்கு இலேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது.
காரணம், கணவர் உட்பட வீட்டிலுள்ளவர்கள் அடிக்கடி கும்பலாக வெளியே சென்று விட்டு நீண்ட நேரம் கழித்தே திரும்புவர்.
எங்கே போகிறார்கள், எதற்காகப் போகிறார்கள் என எதுவும் தெரியாமல் குழம்பிய மருமகளின் கண்களுக்கு, ஒருநாள் வீட்டிலுள்ள பாதாள அறை தென்பட்டது.
உள்ளே சென்று பார்த்தால், மாறு வேடத்திற்கான ஏராளமான துணிமணிகளும் தோப்பா முடியும் இருந்துள்ளன.
அப்போது தான் அவருக்கு உண்மை வெளிப்பட்டது; அதாவது அது பணக்கார குடும்பம் தான், ஆனால் வியாபாரத்திலோ அல்லது முதலீட்டிலோ வந்த வருமானத்தால் அல்ல; மாறாக பிச்சையெடுத்து பணக்காரரான குடும்பம் என்று…
இத்தனை நாளும் மாறுவேடங்களில் வெளியில் சென்று குடும்பமே பிச்சை எடுத்து வந்துள்ளது.
நீச்சல் குளத்துடன் மாளிகை வீடு வாங்கும் அளவுக்கு பிச்சையில் கைத் தேர்ந்த குடும்பம் அது.
மருமகளுக்கு உண்மைத் தெரிந்து விட்டதால், அவரின் வாயை மூட, அடிக்கடி அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளது.
பொறுமையிழந்த அப்பெண்ணின் வீட்டார், அந்த ‘பணக்கார பிச்சைக்கார’ குடும்பத்தின் சகவாசமே வேண்டாம் எனக் கூறி, மகளை தங்களோடு அழைத்துக் கொண்டு போய் விட்டனர்.
‘பாதிக்கப்பட்ட’ பெண்ணின் சோகக் கதை You Tube-யில் வைரலாகியுள்ளது.