
தாய்லாந்து, ஜனவரி 29 – காட்டு யானைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தாய்லாந்து அரசு முதன்முறையாக கருத்தடை தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
தற்போது தாய்லாந்தின் காட்டு உயிரின பாதுகாப்புத் துறை, மூன்று பெண் காட்டு யானைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியுள்ளது.
கிழக்கு தாய்லாந்தின் ஐந்து மாகாணங்களில் யானைகளின் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு சுமார் 8 விழுக்காடாக உயர்வடைந்துள்ளது. இதனால் மனிதர்கள் யானைகளால் அதிகம் தாக்கப்படுவார்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு 334 ஆக இருந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு சுமார் 800 ஆக உயர்ந்துள்ளது. 2012 முதல் மனிதர்–யானை மோதல்களில் சுமார் 200 மனிதர்களும், 100க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அபாய நிலை இனமாகக் கருதப்படும் ஆசிய யானையை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட யானைகள் நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே மாதத்திற்கு முன் மேலும் 15 தடுப்பூசி அளவுகள் பிற யானை குழுக்களுக்கு செலுத்தப்பட உள்ளன.



