
கோலாலம்பூர், மார்ச்-30 – இந்து கோவிலை இடமாற்றம் செய்வது தொடர்பான அண்மைய சர்ச்சையைத் தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்குவதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்றக் கோரிக்கை வலுத்து வருகிறது.
முன்னாள் துணையமைச்சரான தீ லியான் கெரும் (Ti Lian Ker) அதனை ஆதரித்துள்ளார்.
இன மற்றும் மதப் பிரச்னைகள் தொடர்ந்து தூண்டப்படுவதால், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் கூறினார்.
சுதந்திரத்திற்கு முன்பே பல கோயில்கள் அரசு நிலத்தில் இருந்துள்ளன; ஆனால் நில உரிமைகளுக்கான விண்ணப்பங்கள் எப்படியோ “நிர்வாகக் கெடுபிடிகளால் புறந்தள்ளப்பட்டு விட்டன”.
அவற்றுக்கு உண்மையில் இயல்பாகவே நிலப்பட்டா வழங்கப்பட வேண்டும் என லியான் கெர் கூறினார்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோதமாக இயங்காமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக, ஊராட்சி மன்றங்களில் அவற்றைப் பதிவு செய்ய சட்டப்பூர்வ திட்டம் தொடங்கப்பட வேண்டுமென, பி.கே.ஆர் இளைஞர் செயற்குழு உறுப்பினர் பி. நந்தகுமார் முன்னதாக பரிந்துரை செய்திருந்தார்.
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்ற சர்ச்சை தொடர்பில் அவர் அவ்வாறு ஆலோசனைக் கூறினார்.
அது குறித்து கருத்துரைத்த போது லியான் கெர் அவ்வாறு சொன்னார்.
அக்கோயிலின் சட்டப்பூர்வத் தன்மையைத் தொடக்கத்திலேயே உறுதிச் செய்திருந்தால், நிலையை இந்தளவுக்கு சர்ச்சையாக வெடித்திருப்பதைத் தவித்திருக்கலாமென்றார் அவர்.
சுதந்திரத்திற்கு முன் தனியார் அல்லது அரசாங்க நிலங்களில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அரசாங்கம் அப்போதே அங்கீகரித்தோ, பாதுகாத்தோ, இடமாற்றியோ இருந்தால், எழும் உணர்ச்சிப் பூர்வமான பிரச்னைகளைச் சமாளிக்க எளிதாக இருந்திருக்கும்.
இல்லாத பட்சத்தில், உரிமை மீறப்படுகிறதா அல்லது சட்டம் மீறப்படுகிறதா என, வெவ்வேறு சமூகங்கள் காலத்திற்கும் முரண்பட வேண்டியது தான் என்றார் அவர்.
அப்படியொரு நிலையில் அவ்விககாரம் கண்டிப்பாக அரசியலாக்கப்படுமென்பதிலும் சந்தேகமில்லை என லியான் கெர் சுட்டிக் காட்டினார்.