
கோலாலம்பூர், ஜனவரி-20-மலேசியா, கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் டென்மார்க் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரிக்கிறது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார்.
அமெரிக்கா, கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புவது மற்றும் அதனை ஆதரிக்காத நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது போன்ற மிரட்டல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
“ஒரு நாடு இன்னொரு நாட்டை கைப்பற்றுவதை மலேசியா எப்போதும் ஏற்காது” என அன்வார் தெளிவுபடுத்தினார்.
எனவே, கிரீன்லாந்து விவகாரத்தில் மலேசியா ஐரோப்பாவின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது.
அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டால் உருவாகும் புவியியல்-அரசியல் பதற்றங்கள் குறித்து அன்வார் கவலைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், ஈரான் விவகாரத்தையும் பிரதமர் தொட்டுப் பேசினார்.
அமெரிக்காவின் புதிய கூடுதல் வரி மிரட்டல் இருந்தபோதும், ஈரானுடன் தனது வர்த்தக உறவை மலேசியா தொடரும் என்றார் அவர்.
“நாம் மிகவும் பலவீனமாகவும் தோன்றக்கூடாது; அதே நேரத்தில் நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது” என அவர் கூறினார்.
மலேசியா, ஈரானின் இறையாண்மையை மதிக்கும் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகிறது என்றார் அவர்.



