
கோலாலம்பூர், செப் 26 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை அடையாளம் கண்டு, அவர்களின் திறமையை உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக அளவிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் ‘மாணவர் முழக்கம்’ பேச்சுப் போட்டி, இவ்வாண்டு 14ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மாணவர் முழக்கம்’, கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தங்களின் பேச்சாற்றலையும் தனித்திறமையையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த மேடையாக அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ‘மாணவர் முழக்கம் 2026’ போட்டியும் இவ்வாண்டு நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டுக்கான தகுதிச் சுற்றில் நாடு முழுவதிலுமிருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பேச்சுக் காணொளிகளை அனுப்பி பங்கேற்றனர். அனைத்து மாநிலங்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற காணொளிகள் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 98 மாணவர்கள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ‘மாணவர் முழக்கம்’ போட்டியுடன் பயணித்து வரும் திரு. கன்னல்வீரன் ராஜேந்திரன் மற்றும் டாக்டர் ரஹீம் கமாலுதீன், இவ்வாண்டும் நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:














தேர்வாகியுள்ள மாணவர்கள் அடுத்தகட்டமாக காலிறுதிச் சுற்றில் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தவுள்ளனர். காலிறுதிச் சுற்று அக்டோபர் மாதத்திலும், அரையிறுதிச் சுற்று நவம்பர் மாதத்திலும், மாபெரும் இறுதிச் சுற்று டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசிய கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ‘மாணவர் முழக்கம்’, வெறும் பேச்சுப் போட்டியாக மட்டுமின்றி, மாணவர்களின் மொழியாற்றல், சிந்தனைத் திறன், தன்னம்பிக்கை மற்றும் மேடை ஆளுமையை வளர்த்தெடுக்கும் முக்கிய களமாகவும் திகழ்ந்து வருகிறது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் உருவாக்கித் தருவதைத் தனது கடப்பாடாகக் கொண்டுள்ள வணக்கம் மலேசியா, ‘மாணவர் முழக்கம்’ போன்ற முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் தனது பயணத்தையும் தொடரவுள்ளது.



