Latestமலேசியா

MACC-யின் 59வது ஆண்டு நிறைவு: சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்த நீலாயில் கூட்டுப் பிரார்த்தனை

நீலாய், அக் 3 – ஊழலைத் தடுக்கும் பணியில் அதிகாரிகளின் நடவடிக்கைகளோடு, மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 59-ஆவது ஆண்டு நிறைவையொட்டி நீலாயில் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

நெகிரி செம்பிலான், நீலாய் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 80 இந்திய அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஏறக்குறைய 150 பொதுமக்களும் அவர்களுடன் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய MACC சிறப்பு நடவடிக்கைகள் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா, மக்களுக்கும் ஆணையத்திற்கும் இடையிலான நெருக்கம், ஊழல் தடுப்பு முயற்சிகளுக்குத் துணை நிற்கும் என வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

2005-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கூட்டுப் பிரார்த்தனை, 21 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் அக்டோபரிலும் அதிகாரிகளையும் குடும்பங்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளதாக கருணாநிதி கூறினார்.

சவால்கள் நிறைந்த ஊழல் தடுப்புப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள இறையருளை வேண்டுவதும் இப்பிரார்த்தனையின் நோக்கம் என்றார் அவர்.

MACC தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் ஒப்புதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, பல்வேறு சமூகங்களுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாகும்.

சீன, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய சமூகங்களின் விழாக்களுக்கும் இதுபோன்ற ஆதரவை வழங்க வேண்டும் என்ற தலைமை ஆணையரின் அணுகுமுறைக்கு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

பிரார்த்தனையுடன் சமூக உதவியும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. Yayasan Prihatin SPRM சார்பில், Pertubuhan Gemilang Ilmu அமைப்புக்கு 2,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது.

மக்களுடன் நெருங்கிப் பணியாற்றுவதன் வழி, ஊழலுக்கு எதிரான பொது ஒத்துழைப்பை வலுப்படுத்தும் களமாகவும் இந்த ஆண்டு நிறைவு நிகழ்ச்சி அமைந்தது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!