
கோலாலம்பூர், மார்ச்-13-கிள்ளான் பள்ளத்தாக்கில் வாடகை வீட்டு விளம்பரங்களில் இன அடிப்படையிலான பாகுபாடு பெருமளவில் நடைபெறுவது புதிய ஆய்வொன்றில் அம்பலமாகியுள்ளது.
‘Architects of Diversity Malaysia’ பிப்ரவரியில் நடத்திய ஆய்வில் 35,000-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில், 42.8 விழுக்காடு விளம்பரங்கள் குறைந்தது ஓர் இனத்தையாவது ஒதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது.
இதில் இந்தியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுமார் மூன்றில் ஒரு பகுதி விளம்பரங்கள் அவர்களை வேண்டுமென்றே தவிர்த்துள்ளன.
மலாய்க்காரர்கள் 7.6 விழுக்காடும், சீனர்கள் 3.9 விழுக்காடும் மட்டுமே தவிர்க்கப்பட்டுள்ளனர்.
வெறும் 22 விழுக்காட்டு விளம்பரங்களே, எந்த பாகுபாடுமின்றி அனைத்து இனங்களையும் வரவேற்றுள்ளன.
இன அடிப்படையில் ஒதுக்கும் இந்த நடைமுறை மலேசியாவின் வீட்டு சந்தையில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் பாதிப்பதாக, சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனைத் தடுக்க வலுவான சட்டங்களும் இணையத் தளங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.



