
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-8, அதிருப்தியளிக்கும் வகையிலான உணவுத் தயாரிப்பு காரணமாக, பினாங்கில் 2 நாசி கண்டார் உணவகங்கள் உட்பட 8 உணவுக் கடைகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
பினாங்கு மாநகர மன்றம் MBPP மேற்கொண்ட சோதனையில், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் கழிவுகள் இருந்ததோடு, உணவுப் பொருட்கள் தரையில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டதால் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட தூய்மைத் தரக் கட்டுப்பாட்டு விஷயத்தில் அனுசரித்துப் போகும் பேச்சுக்கே இடமில்லையென, MBPP மாநகர மன்ற உறுப்பினர் Tan Soo Siang தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக் கருதி, அடிக்கடி இதுபோன்ற திடீர் சோதனைகள் நடத்தப்படுமென்றார் அவர்.
அசுத்தமான சூழலில் செயல்பட்டு வந்த காரணத்தால், இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இதுவரை 52 உணவுக் கடைகள் ஊராட்சி மன்றங்களால் மூடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
உணவகங்களை மூடும் உத்தரவானது அவர்களின் வியாபாரத்தைக் கெடுப்பதற்காக அல்ல; மாறாக உள்ளூர் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்யவே என்றார் அவர்.