
குறிப்பிட்ட நேரத்திற்குள் ‘இ-ஃபைலிங்கை’ விண்ணப்பியுங்கள் – LHDN அறிவுறுத்தல்
கோலாலம்பூர், பிப்ரவரி 24 –
மலேசிய வரித்துறை ஆணையமான LHDN அனைத்து வரித்தாரர்களும் தங்களின் இ-ஃபைலிங் (e-Filing) வருமானவரி அறிக்கையை காலக்கெடு முடிவதற்கு முன் சமர்ப்பித்து, வரியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
காலதாமதம் ஏற்பட்டால் அபராதம், வெளிநாட்டு பயணத் தடை மற்றும் பிற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டின் (Tahun Taksiran 2025) இ-ஃபைலிங் காலம் 2026 மார்ச் 1ஆம் தேதி தொடங்கும். இதனால், வரித்தாரர்கள் தேவையான ஆதார ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல் அல்லது ஏதேனும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என LHDN கார்ப்பரேட் சேவை துறை அதிகாரி நூர் அஸுரீன் இஸ்மாயில் (Pegawai LHDN Jabatan Khidmat Korporat, Nur Azureen Ismail) எச்சரித்துள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான வரிச்சலுகைகளில் சில முக்கிய உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி (OKU) குழந்தைகளுக்கான கூடுதல் வரிச்சலுகை 6,000 த்திலிருந்து 8,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் வாழ்க்கைமுறை செலவுகளுக்கான வரிச்சலுகை 500 இலிருந்து 1,000 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், விளையாட்டு மைய நுழைவு கட்டணம், போட்டி பங்கேற்பு கட்டணம் மற்றும் உடற்பயிற்சி மைய உறுப்பினர் கட்டணம் ஆகியவை அடங்கும்.
மேலும், இச்சலுகை தனிநபர் மட்டுமன்றி துணைவர், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவச் செலவுகளுக்கான வரிச்சலுகை தற்போது மலேசியாவில் வசிக்கும் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு அதிகபட்சம் 8,000 ரிங்கிட் வரை சலுகை பெறலாம். இதில் மருத்துவ சிகிச்சை, பல் சிகிச்சை, முழுமையான உடல் பரிசோதனை (தடுப்பூசி உட்பட) மற்றும் பராமரிப்பாளர் செலவுகள் அடங்கும். இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை.
இந்நிலையில் வரித்தாரர்கள் தங்களுக்கு தகுதியான அனைத்து வரிச்சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தவறான கோரிக்கைகளைத் தவிர்க்க LHDN அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



