பெய்ஜிங், டிசம்பர்-12, தன்னை ஒரு தனித்து வாழும் தந்தையாக காட்டிக்கொள்ள பெண் குழந்தையை உடன் வைத்துக்கொண்டே உணவு விநியோகிப்பில் ஈடுபட்டு, மக்களிடத்தில் அனுதாபம் பெற முயன்ற ஆடவர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கட்டுக் கதையைக் கூறியே சமூக ஊடகத்தில் சுமார் 400,000 பின்தொடர்பவர்களை (followers) அவர் பெற்றிருக்கிறார்.
தாய் கைவிட்டு விட்டதால், வேறு வழியின்றி உணவுகளை அனுப்ப வெளியே வேலைக்குக் கிளம்பும் போது, தம்முடனேயே குழந்தையை கூட்டிச் செல்வதாகக் கூறி நூற்றுக் கணக்கில் அவர் வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார்.
கலங்காதவர் மனம் கூட கலங்கி விடும் அளவுக்கு, அந்த வீடியோக்கள் பெரும் அனுதாப அலையையே உருவாக்கி விட்டன.
மகளுக்கு ஒரு நாளைக்காவது வாய்க்கு ருசியாக உணவு வாங்கித் தர வேண்டி, ஒரே நாளில் 43 உணவு ஆர்டர்களை அனுப்பி 183 ரிங்கிட்டை சம்பாதித்ததாக ஒரு வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரலான இன்னொரு வீடியோவில், வேலையின் போது மகளின் முகத்தில் தற்செயலாக காயம் ஏற்பட்டதாகவும் கூறி அனுதாபத்தைக் குவித்து விட்டார்.
போதாக்குறைக்கு, தனது பிள்ளையின் வாழ்வாதாரத்தை முன் வைத்து, இணைய விற்பனையிலும் அவ்வாடவர் நல்ல சம்பாத்தியத்தைப் பார்த்துள்ளார்.
ஆனால் அவ்வாடவர் உணவு அனுப்பும் வேலை செய்யவில்லை; அவர் தனித்து வாழும் தந்தையும் அல்ல என்ற உண்மையை போலீஸ் அண்மையில் தான் கண்டுபிடித்தது.
குழந்தையை தாய் கைவிட்டதாகக் கூறியதும் கட்டுக் கதையே; மூவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகின்றனர்.
பொது அமைதியைக் குலைத்ததன் பேரில் அவ்வாடவரை 10 நாள் காவலில் வைக்கவும், 40 ரிங்கிட் அபராதம் விதிக்கவும் போலீஸ் உத்தேசித்துள்ளது.
அந்த ‘அனுதாப’ வீடியோக்களை நம்பி அவரை வைரலாக்கிய சீன வலைத்தளவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.