
வாஷிங்டன் – ஜூலை-26 – சுந்தர் பிச்சை…
கணினியியல் தொழில்நுட்பத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். இன்று உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். தமிழகத்தின் மதுரையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பிரசித்திப் பெற்ற Stanford பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
தனது கல்வியறிவாலும் அசாத்திய தொழில்நுட்ப திறமையாலும் 2004-ல் கூகள் நிறுவனமே அழைத்து தலைமைப் பொறுப்பில் அமர வைத்து அழகு பார்க்கப்பட்டவர்.
2015 முதல் கூகளின் CEO-வாக பரிணமித்து, பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெற்றார். 2019-ல் Alphabet Inc நிறுவனத்திற்குத் தலைமையேற்றவர் அங்கும் மிளிர்ந்தார்.
அந்நிறுவனத்தின் பங்குகள் பன்மடக்கு உயர்ந்து, முதலீட்டாட்டாளர்களுக்கு 120% வரை இலாபம் கொட்டியது.
அதன் விளைவு, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்து, இன்று முதன் முறையாக உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
Bloomberg நிறுவனத்தின் தகவலின் படி அவரின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Forbes சஞ்சிகையின் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் சுந்தர் பிச்சையின் நிகர சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலராக உள்ளது.
வழக்கமாக ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்கள் தான் கோடீஸ்வரர்களாக இருப்பர்; நிறுவனராக இல்லாமல் CEO உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள் மிக மிக அரிதாகவே கோடீஸ்வரர் என்ற நிலையை எட்டுவர்.
அவ்வகையில் அந்த அரியச் சாதனையை சாத்தியமாக்கி அனைவருக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் இந்தத் தமிழர்.