
கின்ஷாசா, ஏப்ரல்-9, ஆப்பிரிக்காவின் பழமையான தேசிய பூங்காவில் ஆந்த்ராக்ஸ் (anthrax) விஷத்தால் குறைந்தது 50 நீர்யானைகள் மற்றும் பிற பெரிய விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
இஷாஷா நதியில் அசைவற்ற விலங்குகள் மிதப்பதைக் காட்டும் புகைப்படங்களை, கோங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள விருங்கா தேசிய பூங்கா பகிர்ந்துள்ளது.
விஷத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை; ஆனால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
மடிந்த விலங்குகளை மீட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்க அவற்றை புதைக்கும் பணி நடந்து வருகின்றது.
இதையடுத்து, வனவிலங்குகளைத் தவிர்க்கவும், குடிப்பதற்கு முன், உள்ளூர் மூலங்களிலிருந்து பெறப்படும் தண்ணீரை கொதிக்க வைக்கும்படியும் கோங்கோ இயற்கை பாதுகாப்பு நிறுவனம், மக்களை எச்சரித்துள்ளது.
7,800 சதுர கிலோ மீட்டர் பரந்து விரிந்த விருங்கா, ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள உயிரியல் ரீதியாக மிகவும் வேறுபட்ட, ஆனால் மிகவும் ஆபத்தான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.
இந்தப் பூங்கா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்; ஆனால் வேட்டையாடல் மற்றும் போரின் விளைவாக இருபதாயிரமாக இருந்த நீர்யானைகளின் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து பூங்காவில் நீர்யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இந்நிலையில் 50 நீர்யானைகள் இப்படி பரிதாபமாக மடிந்திருப்பது இயற்கை ஆர்வலர்களைக் கவலையடைச் செய்துள்ளது.
Bacillus Anthracis எனும் பாக்டீரிய மூலம் பரவும் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமி ஆபத்தானது, ஆனால் பொதுவாக இது எளிதில் பரவாது.
இது பெரும்பாலும் மண்ணில் பல ஆண்டுகளாக ஒளிந்துகொண்டு, வித்துகளாகவே உயிர்வாழ்கிறது; உள்ளிழுத்தல், வெட்டு அல்லது காயம் மூலமே ஒரு விலங்கிற்குள் அது நுழைகிறது.