Latestஅமெரிக்காஉலகம்

கோமாவில் இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி; முதல் அறிக்கையை வெளியிட்ட மொஜ்தபா கமேனி

தெஹ்ரான், மார்ச்-13-இஸ்ரேல்-ஈரான் போரில் காயமடைந்து தாம் கோமாவில் இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆயதொலா மொஜ்தபா கமேனி.

அதில், வளைகுடா நாடுகள் அமெரிக்க இராணுவத் தளங்களை மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அந்த தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்கியுள்ளோம்; மாறாக அந்த நாடுகளைத் தாக்கவில்லை. ஆனால், தளங்களை அவை மூடாவிட்டால், தொடர்ந்து அமெரிக்கத் தளங்களை குறிவைத்து தாக்க வேண்டிய நிலை ஏற்படும்” என அவர் எச்சரித்தார்.

“எங்களுக்கு 15 நாடுகளுடன் எல்லைகள் உள்ளன. அவர்களுடன் எப்போதும் நல்லுறவை விரும்பியுள்ளோம்; இன்னமும் விரும்புகிறோம்” என்றார் அவர்.

இஸ்ரேல், அமெரிக்கா பெயர்களைக் குறிப்பிடாமல், “எதிரிகள் செய்த குற்றங்களுக்கு, குறிப்பாக 168 மாணவிகள் உயிரிழந்த மினாப் பள்ளி படுகொலைக்கு, நிச்சயம் பழிவாங்காமல் விட மாட்டோம்” என்றும் மொஜ்தபா சூளுரைத்தார்.

இஸ்ரேல்-அமெரிக்க வான் தாக்குதல்களில் மொஜ்தபா ஒரு காலை இழந்து, கோமா நிலையில் படுத்திருப்பதாக தெஹ்ரானிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிரிட்டனின் The Sun பத்திரிகை முன்னதாக செய்தி வெளியிட்டது.

அதோடு, கடுமையான வயிறு அல்லது கல்லீரல் சேதத்திற்கும் அவர் ஆளாகியிருப்பதாகக் கூறி அது பரபரப்பை கூட்டியது.

ஒருவேளை இத்தகவல் உண்மையென்றால், பிப்ரவரி 28-ஆம் தேதி தனது தந்தை ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் தான் மொஜ்தமாவும் காயமடைந்தாரா எனத் தெரியவில்லை.

இந்நிலையில் அச்செய்திகளை மறுக்கும் வகையில், மொஜ்தபாவின் அறிக்கை வெளியாகியிருந்தாலும் தொலைக்காட்சியிலோ அல்லது வீடியோ வாயிலாகவோ அவர் நேரில் தோன்றி பேசாதது யூகங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரின் முகத்தை ஈரானியர்கள் இன்னும் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!