Latestமலேசியா

கோம்பாக்கில் உரிமம் பெறாத சிறுவர்கள் இல்ல பராமரிப்பாளர், ஐந்து சிறுவர்களைச் சேர்ந்த 15 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டான்

கோலாலம்பூர், ஏப் 9-கோம்பாக்கில் உரிமம் பெறாத சிறுவர்கள் சமூக நல இல்லத்தின் 25 வயது பராமரிப்பாளரான ரத்னவேலு (Retna Velu, ) என்ற 25 வயது இளைஞன் , 8 வயது சிறுவன் உட்பட ஐந்து சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொண்டதாக கொண்டுவரப்பட்ட 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டான்.

அம்பாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிகள் நோர்ஷிலா கமரூதின் மற்றும் ஹோ குவாங் சின் முன்னிலையில், குற்றச்சாட்டுகள் தமிழில் வாசிக்கப்பட்ட பின்னர் அந்த குற்றச்சாட்டுக்களை ரத்னவேலு ஒப்புக் கொண்டான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும், 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மீது உடல் ரீதியான மற்றும் உடல் ரீதியற்ற பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அந்த இளைஞன் மீது மேலும் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தக் குற்றங்கள் பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்தன. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 14(a) மற்றும் 15(a)(i) பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், அதே இல்லத்தில் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் பாலியல் உறவு கொண்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் ரத்னவேலு ஒப்புக்கொண்டான்.

இரு நீதிமன்றங்களும் ரத்னவேலுவுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டதோடு தண்டனைக்கான தேதியை மே 21 ஆம்தேதி நிர்ணயித்தன.

இதனிடையே அந்த இல்லத்தின் உரிமையாளரான 31 வயதுடைய எஸ். வேலன், 2019- ஆண்டுக்கும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குமிடையே 16 மற்றும் 13 வயதுடைய மேலும் நான்கு சிறுவர்களிடம் உடல் ரீதியாகவும் உடல் ரீதியற்ற முறையிலும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் நான்கு குற்றச்சாட்டுளை மறுத்தார்.

இந்தக் குற்றம், அந்த இல்லத்திலும், உலு சிலாங்கூர் , கலும்பாங்கில் உள்ள அதன் வளாகத்திலும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வேலனுக்கு தலா 15, 000 ரிங்கிட் ஜாமின் தொகையை அனுமதிப்பதற்கு நீதிபதி நோர்ஷிலாவும் நீதிபதி ஹோவும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் வேலன் மாதத்திற்கு ஒருமுறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் தனது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்பதோடு அரசு தரப்பு சாட்சிகளை மிரட்டக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவருக்கு எதிரான விசாரணை தேதியை இரு நீதிமன்றங்களும் ஜூன் 10ஆம்தேதி நிர்ணயித்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!