
கோலாலம்பூர் – ஜூலை 26 – நேற்று, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் டான் ஸ்ரீ நடராஜா தலைமையில் ஆடிப்பூர திருவிழா வைபவம் மிக விமரிசையாக தொடங்கியது.
அம்மனுக்கு உகந்த விழாவாகிய இந்த ஆடிப்பூர திருவிழா முந்தைய காலத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 1 நாள் விழாவாக மட்டுமே கொண்டாடப்பட்டது.
ஆனால் கடந்த 24 ஆண்டுகளாக டான் ஸ்ரீ அவர்களின் தலைமையில் ஆடிப்பூர உச்சவ திருவிழா 11 நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருவது மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய ஆடிப்பூர முதல் நாள் விழாவில், 108 சங்கபிஷேகம், சிறப்பு பூஜைகள், மங்கள இசை வாத்தியங்கள், பாரம்பரிய இசை நிகழ்வு மற்றும் பரதநாட்டியம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்துகொண்டு தெய்வீக படைப்பினை வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் பக்தர்களுக்கும் டான் ஸ்ரீ நடராஜா அவர்கள், பாராட்டுச் சின்னங்களை எடுத்து வழங்கி சிறப்பு செய்தார்.
இதனிடையே, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்ற இந்த விழாவில், பக்த மெய்யன்பர்கள் திரளாக வந்து கலந்துக் கொள்ள வேண்டுமெனவும் நடராஜா கேட்டுக் கொண்டார்.