
கோலாலம்பூர், பிப் 24 – மின்னணு கழிவுகளை பதப்படுத்தும் 47 சட்டவிரோத தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களை விசாரணைக்காக போலீசார் அழைக்கவிருக்கின்றனர்.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த தொழிற்சாலைகள் தனியார் நிலம் அல்லது அரசு கையிருப்பு நிலத்தில் இருப்பதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் ( Azmi Abu Kassim ) கூறினார்.
மேல் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த நிலத்தின் உரிமையாளர்களை போலீசார் அடையாளம் காண்பார்கள்.
இது அவர்களின் நிலத்தில் நடக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும்.
இதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களால் நிதியளிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண கூடுதல் விசாரணை தேவை என்று அஸ்மி இன்று தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையை நிறுவுவதற்கு பெரிய முதலீடுகள் தேவைப்படுகிறது.
இந்த கும்பலின் நிதி ஆதாரத்தைக் கண்டறிய புக்கிட் அமானின் பணமோசடி தடுப்புப் பிரிவுடன் இணைந்து பணியாற்றுவோம்.
மேலும் இந்த சட்டவிரோத தொழிற்சாலை குறித்து விசாரணை நடத்த சுற்றுச்சூழல் துறையுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 15 ஆம்தேதியன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட Op Hazard மூலம் RM2.86 பில்லியன் மதிப்பிலான பல்வேறு மின்-கழிவுகளை போலீசார் பறிமுதல் செய்ததாக கடந்த வியாழக்கிழமை ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.