கோலாலம்பூர், செப்டம்பர்-6 – சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நடத்தை நெறிமுறைகளை (Code of Conduct) உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கியது.
அந்த கலந்தாய்வு தொடருமெனக் கூறிய தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil), அக்டோபர் அல்லது நவம்பரில் அந்த நடத்தை நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றார்.
நடத்தை நெறிமுறைகள் இருக்கும் பட்சத்தில், சமூக ஊடகப் பயன்பாட்டில் விதிமீறல்கள் நிகழும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருக்குமென்றார் அவர்.
நானும் துணையமைச்சர் தியோ நீ ச்சிங்கும் ( Teo Nie Ching) கடந்த ஈராண்டுகளில் மட்டும் 21 தடவை சமூக ஊடகப் பிரதிநிதிகளைச் சந்தித்து விட்டோம்.
மோசடிகளைக் கையாளும் முறையை மாற்றிக் கொள்வது, இணைய பகடிவதையை கையாள்வது போன்ற கோரிக்கைகளை அச்சந்திப்பில் வலியுறுத்தினோம் என ஃபாஹ்மி சொன்னார்.
மாணவிகளை வீடியோ எடுத்து பதிவேற்றியதற்காக, 24 வயது பள்ளி ஓட்டுநர் ஜோகூரில் இன்று கைதுச் செய்யப்பட்டது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
அந்நபர் விசாரணைகளுக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.