
கோலாலம்பூர், மார்ச்-14 – இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தும் பேரணிக்கு தூண்டியதன் பேரில், வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அருண் துரைசாமி இன்று புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த அருண், அமுலாக்க நடவடிக்கைகள் போதவில்லை என பேசியதிலும், அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்ததிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமக்கிருக்கும் உரிமையை மட்டுமே பயன்படுத்தியதாகச் சொன்னார்.
சட்ட அமுலாக்கம் சரியில்லை என்றால் அது குறித்து கேள்வியெழுப்புவதும், பேரணி நடத்தவும் நமக்கு உரிமையிருப்பதாக, செய்தியாளர்களிடம் அருண் கூறினார்.
2012 அமைப் பேரணி சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைத் தான் நான் பயன்படுத்துகிறேன்; இது நிந்தனைச் செயல் அல்ல என அவர் தெளிவுப்படுத்தினார்.
எனவே, பேரணிக்கு அழைப்பு விடுத்து வீடியோவை வெளியிட்டதற்காக நான் வருத்தப்படவில்லை; இந்துக்களின் விரக்தியின் வெளிப்பாடே இதுவென அருண் மேலும் கூறினார்.
தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவுப்படுத்தியதற்காக இம்மாத இறுதிக்குள் சம்ரி வினோத் மீது வழக்குத் தொடரப் போவதாகவும், அவ்விவகாரம் தொடர்பில் மாமன்னரைச் சந்தித்து பேச அனுமதி கோரப் போவதாகவும் அருண் சொன்னார்.
இந்துக்களை அவமதித்ததாகக் கூறி சம்ரி வினோத் மீது 894 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் நேற்று உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.