Latestமலேசியா

சரவாக்கை மதியுங்கள், இல்லையேல் ‘விவாகரத்து’! நந்தா லிங்கி எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜனவரி-30 – இன, மத, மொழி போன்ற உணர்ச்சிப்பூர்வ பிரச்னைகளை கையாள்வதில் சரவாக் மாதிரியைப் (Sarawak Model) பின்பற்றுங்கள் என, சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பான GPS-சின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தீபகற்ப மலேசியாவுக்கு வலுவான செய்தி அனுப்பியுள்ளார்.

தீபகற்பத்தில் முடிவில்லா அரசியல் சண்டைகள் தேசிய ஒற்றுமையை ஆபத்தில் தள்ளுகின்றன.

ஆனால் சரவாக்கிலோ, டாயாக், சீன, மலாய் மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து, நல்லிணக்கமாக வாழ்கின்றனர்.

மலேசியாவுக்கு தாங்கள் விசுவாசமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினாலும், ‘என்றுமே சரவாக்கிற்கே முன்னுரிமை’ என்றார்.

தவிர, ‘நீங்கள் எங்களை விரும்பவில்லை என்றால், பேசாமல் விவாகரத்து செய்து விடுங்கள்’ எனவும் பொதுப்பணித் துறை அமைச்சருமான நந்தா லிங்கி கடுமையாக எச்சரித்தார்.

அவரின் இக்கருத்துக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமைகள் குறித்த சர்ச்சைக்கு நடுவில் வந்துள்ளன.

சரவாக்கில் எண்ணெய் – எரிவாயு வளங்களை மாநில அரசே நிர்வகிக்க விரும்புவது சட்டத்திற்குட்பட்டதா என்பதை விளக்கக் கோரி பெட்ரோனாஸ், கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆனால் சரவாக் அரசாங்கமோ, அதன் Oil Mining Ordinance 1958 சட்டத்தை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தால் மீற முடியாது என தொடர்ந்து வலியுறுத்துகிறது.

“பெட்ரோனாஸை நாங்கள் காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் சரவாக் உரிமைகளை உறுதியாகக் காப்பாற்றுவோம்” என அவர் தெரிவித்தார்.

எனவே, ‘சரவாக்கை மதியுங்கள், இல்லையெனில் நாடு உடைந்து போகும் அபாயம் உள்ளது’ என்ற கருத்தையே நந்தா லிங்கி, BFM வானொலிப் பேட்டியில் கூறிச் சென்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!