
சிரம்பான், ஏப்ரல்-7, புக்கிட் தங்காவில் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது கருஞ்சிறுத்தையின் கோரத் தாக்குதலுக்கு ஆளான ஆடவருக்கு, அச்சம்பவம் இன்னமும் கண்முன்னே நிழலாடுகிறது.
எனினும், அதில் உயிர் பிழைத்தது கடவுளின் செயலே என 54 வயது ஏ. சுரேசஷ் குமார் கூறினார்.
முகத்திலும் தலையிலும் தனது கூரிய நகங்களாலும் பற்களாலும் பிராண்டிய சிறுத்தை, மற்ற வாகனங்களின் இயந்திர சத்தத்தால் பயந்து ஓடி விட்டது.
இல்லையென்றால் தன் கதை அங்கேயே முடிந்திருக்குமென அவர் சொன்னார்.
சிறுத்தை சீறிப் பாய்ந்ததில் தலையில் 30-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை தான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையிலிருந்து சுரேஷ் குமார் வீடு திரும்பினார்.
தூக்கத்திலும் சிறுத்தையே வந்துபோகிறது; அந்த அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை என்றார் அவர்.
சிறுத்தை பாய்ந்த போது, கையில் கிடைத்த பாட்டிலை அதன் வாயில் வைத்து சொருகினேன்;
இல்லையென்றால் என்னை கடித்துக் குதறி, இரையாக்கியிருக்கும் என சுரேஷ் குமார் சொன்னார்.
25 ஆண்டு காலமாக லாரி ஓட்டுநராக இருந்து வரும் தாம் இச்சம்பவத்தின் மூலம் வைரலானதை நினைத்துப் பார்க்கவில்லை எனக் கூறிய சுரேஷ், யார் யாரோ வந்து மருத்துவமனையில் நலம் விசாரித்தது கண்டு நெகிழ்ந்துபோனார்.
தனக்கு நேர்ந்த சம்பவத்தை ஒரு பாடமாகக் கொண்டு, மற்ற லாரி ஓட்டுநர்களும், வாகனமோட்டிகளும் இனி சாலைகளில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்; பாதுகாப்பான இடத்திலேயே நிற்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனைக் கூறினார்.
ஜெலெபுவிலிருந்து சிலாங்கூரின் கிள்ளானுக்கு கோழி தீவனங்களை ஏற்றிச் சென்ற போது சுரேஷ் குமார் அச்சம்பவத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.