Latestமலேசியா

சிறையிலிருந்து வெளியாகும் முன்னர் மகன் மரணம்; தாய்க்கு 560,000 ரிங்கிட் இழப்பீடு

ஈப்போ, ஜூலை-10 – 2017-ஆம் ஆண்டு சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகன் மரணமடைந்த நிலையில், அதற்கு இழப்பீடாக அவரின் தாயாருக்கு 560,000 ரிங்கிட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

30 வயது R.சிவா திருட்டுக் குற்றத்திற்காக தாப்பா சிறையில் 8 மாதங்கள் அடைக்கப்பட்டார்.

ஆனால் சிறைவாசம் முடிந்து வீடு திரும்பும் நாளில், அவரின் குடும்பத்தாருக்கு சிறைச்சாலையிலிருந்து ஓர் அதிர்ச்சி அழைப்பு வந்தது.

“மகனைக் கூட்டிச் செல்ல வர வேண்டாம்; மருத்துவமனையில் அவனது சடலத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று…

இந்நிலையில், அலட்சியம் காரணமாகவே தனது மகன் மரணமுற்றதாகக் கூறி, சிறைச்சாலை மற்றும் போலீஸ் அதிகாரிகள், மத்திய அரசாங்கம் உட்பட 13 தரப்பினர் மீது, சிவாவின் தாயார் ஆர். முனியம்மா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஈப்போ உயர் நீதிமன்றம், சிவாவின் ஆரோக்கியத்தை முறையாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் சிறைக் காவலர்களும் போலீஸ் தரப்பும் தவறி விட்டதாக முடிவுக்கு வந்தது.

மருத்துவ பராமரிப்பு மற்றும் சரியான ஊட்டச்சத்து போன்ற, சிவாவின் அடிப்படை உரிமையை மட்டும் அதிகாரிகள் புறக்கணிக்கவில்லை; மாறாக, மோசமாகி வந்த அவரின் உடல் நிலை குறித்தும் குடும்பத்தாரிடம் தெரிவிக்கத் தவறிவிட்டனர்.

சிவா இயற்கையான காரணங்களால் இறந்ததாக ஒரு மரண விசாரணை அதிகாரி முன்பு தீர்ப்பளித்திருந்தாலும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரது மரணத்தைத் தடுத்திருக்கலாம் என நீதிமன்றம் கூறியது.

எனவே, சிவாவின் தாயார் ஆர். முனியாமாவுக்கு, மகனின் மரணத்தால் ஏற்பட்ட வலி மற்றும் துன்பத்திற்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது; இதில் அதிகாரிகளின் தவறான நடத்தைக்கு 200,000 ரிங்கிட், உணர்ச்சி துயரத்திற்கு 300,000 ரிங்கிட் மற்றும் துக்கத்திற்கு 10,000 ரிங்கிட் ஆகியவை அடங்கும்.

ஆதரவு இழப்புக்கு 38,400 ரிங்கிட், சிறப்பு இழப்பீடாக 15,500 ரிங்கிட் மற்றும் சட்டச் செலவுகளாக 70,000 ரிங்கிட்டை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!