
கோலாலம்பூர், ஜனவரி-13, மலாயாப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில் ‘ஹேம் சன்விட்ச்’ ரொட்டி விற்கப்படுவது குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அந்த ‘Ham and Cheese’ சன்விட்ச் ரொட்டியின் ஹலால் அந்தஸ்து குறித்து விரிவான விசாராணை நடத்துமாறு, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே வலியுறுத்தியுள்ளார்.
ஹேம் பன்றி இறைச்சியிலானது; அப்படியிருக்க மலாய்க்காரர்கள் அதிகம் பயிலும் மலாயாப் பல்கலைக் கழகத்தில் அது விற்கப்பட்டுள்ளது.
அதை விட, அந்த சன்விட்ச் ரொட்டிக்கு எப்படி ஹலால் சான்றிதழ் கிடைத்தது என மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அக்மால் கேள்வி எழுப்பினார்.
முஸ்லீம் அல்லாத சீன, இந்திய மாணவர்களுக்கு அது விற்கப்படுவதாகவே வைத்துக் கொள்வோம்; ஆனால் பொட்டலத்தில் ஹலால் சான்றிதழ் இருப்பது ஏன் என்றார் அவர்.
இதனால் சம்பந்தப்பட்ட கடையில் விற்கப்படும் மற்ற பொருட்களுக்கான ஹலால் முத்திரைகளின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுவதாக அவர் சொன்னார்.
இது நடந்திருக்கக் கூடாது; ஹலால் சான்றிதழ் தரநிலைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அவர் சொன்னார்.
‘Ham and Cheese என்ற லேபலுடன் விற்கப்பட்ட அந்த சன்விட்ச் ரொட்டி குறித்து கடந்த வெள்ளியன்று பல்கலைக்கழக மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து, விசாரணைகளை எளிதாக்குவதற்காக, UM தனது வளாகத்தில் செயல்படும் இரண்டு கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட்டது.