ஷா அலாம், அக் 1- சிலாங்கூர் மாநில சிலம்பக் கோர்வை கழகத்தின் போட்டியில் 5 மாவட்டங்களைக் சேர்ந்த 265 பேர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
13 ஆவது முறையாக நடைபெற்ற இந்த போட்டியில் உலு லங்காட், செப்பாங், பெட்டாலிங் ஜெயா, கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் சிலம்பக் கோர்வை பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் இப்போட்டிக்காக தங்களது பயிற்சியாளர்களால் தயார்படுத்தப்பட்டதாக சிலாங்கூர் சிலம்பக் கோர்வை கழகத்தின் தலைவர் k. அன்பரசன் தெரிவித்தார்.
30 பிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 வயது முதல் 20 வயதுடையவர்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி, ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி, செர்டாங் தமிழ்ப்பள்ளி , சிப்பாங் மற்றும் செத்தியா அலாம் நோர்த்ஹம்மாக் ஆகிய தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சிலம்பக் கோர்வை கழகத்தின் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.
ஷா அலாம் , செக்சன் டேவான் பெசார் தஞ்சோங்கில் காலை மணி 8.30 அளவில் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்.
இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்ப போட்டியில் அதிகமான மாணவர்களும் மாணவிகளும் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்றதோடு பல பெற்றோர்களும் பார்வையாளர்களாக கலந்துக் கொண்டது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தமதுரையில் தெரிவித்தார்.
நமது பாரம்பரியம் மற்றும் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்துதற்கு ஒரு தளமாக சிலம்பக் கலை அமைந்திருப்பதோடு இந்த விளையாட்டில் அதிகமான மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பிரகாஷ் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் மலேசிய சிலம்பக் கோர்வை கழகத்தின் தேசிய தலைவரும் ஜோகூர் மாநில தலைவருமான K. அன்பழகன், மலேசிய சிலம்பக் கழகத்தின் கிரேன்ட் மாஸ்டரும், சிலம்ப நடுவர் மன்ற தலைவருமான சந்திரசேகர், போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நித்யானந்தன், ஹேமானந்தன்,பிரகாஷ், உட்பட சிலம்பக் கோர்வை கழகத்தின் அதிகாரிகளும் , பயிற்சியாளர்களும் கலந்துகொண்டனர்.