
ஜோகூர் பாரு, ஏப்ரல்-13, ஜோகூரில், சாலை விபத்தில் சிக்கிய மோட்டார் சைகிளோட்டிக்கு உதவச் சென்ற ஆடவர், குடிபோதையில் காரோட்டி வந்த ஆடவரால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஜோகூர் பாரு – கோத்தா திங்கி சாலையின் 16-ஆவது கிலோ மீட்டரில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அசல் விபத்து, மியன்மார் நாட்டவர் என நம்பப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆடவரை உட்படுத்தியதாகும்; ஜோகூர் பாருவிலிருந்து தாமான் செத்தியா துரோப்பிகா செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த அவரின் மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு விழுந்தது.
அதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கண்ணெதிரே விபத்தைப் பார்த்த 37 வயது ஆடவர், தனது வாகனத்திலிருந்து இறங்கி, உதவிகள் வந்து சேருவதற்காக, போக்குவரத்தை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது 25 வயது இளைஞன் ஓட்டி வந்த கார் திடீரென அவரை மோதித் தள்ளியது; மோசமான உள்காயம் ஏற்பட்டு அவ்வாடவரும் அங்கேயே உயிரிழந்தார்.
குடிபோதையில் வந்து மோதிய அவ்விளைஞனுக்கு முகத்தில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
அவன் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டு 4 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதை, ஸ்ரீ ஆலாம் OCPD துணை ஆணையர் மொஹமட் சொஹாய்மி இஷாக் உறுதிப்படுத்தினார்.